இறுதிச்சுற்று எனும் சூப்பர் ஹிட் படத்தை இயக்கியவர் சுதா கெங்காரா. அவர், தற்போது, நடிகர் சூர்யாவை வைத்து சூரரைப் போற்று என்ற படத்தை இயக்கி வருகிறார். நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், தயாரிப்பாளர் குனீத் மோங்கா இணைந்து தயாரிக்கும் சூரரைப் போற்று படத்தில், நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்தியாவில் முதன் முதலில் பட்ஜெட் விமானப் பயணத்துக்கு பிள்ளையார் சுழி போட்டர் ஜி.ஆர்.கோபிநாத். அவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்துத்தான் சூரரைப் போற்று படம் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது. ஆனால், அது வாழ்க்கை வரலாற்று படம் அல்ல என இப்போது தெரிய வந்திருக்கிறது. ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கையில் நடந்த முக்கியமான சம்பவங்களை மட்டும் தொகுத்து, அதை திரைக்கதை அமைத்து, சூரரைப் போற்று படத்தை உருவாக்கி வருவதாக தகவல் கசிந்திருக்கிறது.
கடந்த தமிழ் வருடப் பிறப்பு நாளில், சண்டிகரில் துவங்கிய இந்தப் படத்தின் முதல் கட்டப் படபிடிப்பு, தற்போது முடிவடைந்திருக்கிறது. விரைவில் சென்னையில், அடுத்தக் கட்ட படபிடிப்புத் துவங்கும் என, நடிகர் சூர்யா தெரிவித்திருக்கிறார்.